Monday, September 19, 2011

உன்னை தேடி வந்தேன்











ஏதோ ஒரு மாலை மழை தூறும் வேளை உன்னை  மீண்டும் சந்திப்பேன்;
என் காதலை உன் மொழியில் சொல்லி உன்னை இருகையால்வாரி அணைப்பேன்;
என்ற பல அற்ப சொற்ப கற்பனைகளோடுதான் அன்பே உன்னை தேடி வந்தேன்;
அந்நாட்களின் ஞாபகங்கள் உயிரில் வளர்த்த மாய மலைகளை சுமந்து வந்தேன்;

செல்லமாய் நீ முறைத்ததும் சிறுபிள்ளைபோல் நீ அழுததும்;
வெல்லமாய் நீ சிரித்ததும் வானமாய் என் வாழ்வில் நீ படர்ந்ததும்;
உன்னோடு இரவுகளில் உறக்கம் துறந்ததும் எழுதி வைத்த கவிதைகளை உன்னிடம் கொடுக்க மறந்ததும்;
உன்னை தேடி ஓடி வரச்சொல்லி என்னை தூண்ட உயிரும் மண்டியிட்டு வேண்ட நான் வந்தேன்;

நதி போகும் வழி யாவும் மனிதனின்  நாகரீகம் தோன்றியதாய்;
ரதி உன்னை கண்ட இடம் எங்கும் என் நினைவுகள் தொன்றியது;
விதி நம்மை பிரித்தது அன்பே தேய்பிறை போல் இன்பம் தேய்ந்தது;
கதி நீதான் என்று மூன்று வருடம் கழித்துன்னை தேடி நான் வந்தேன்;

உன் வீடு வந்தவுடன் உன் கல்லூரி நண்பனென மட்டுமே அறிமுகமாயிருந்த என்னை உன் தாய் உபசரிக்க;
அவர் காட்டிய உன் திருமண புகைப்படங்கள்  என் ஊன் உடல் உயிர் ஆன்மா ஜீவனென முழுவதுமாய் எரிக்க;
இதற்காகவா கண்டங்கள் தாண்டி அண்டமெல்லாம் சுற்றி என் காதலுக்கு பிண்டம் வைக்கும் இக்கட்சியை பார்க்க; 
ஆண்டுகள் கழிந்து ஓடி வந்தேன் இனி என்ன செய்ய போகிறேன் எங்கு செல்ல போகிறேன் என்று ஆயிரம் கேள்விகள் என்னை நானே கேட்க;

புண்பட்ட புன்னகையோடு அங்கிருந்து விடை பெற்றேன் அன்பே வாழ்வியலின் மெய் நடையை உன்னிடம் நான் கற்றேன்;
அன்று உன் காதலை நீ சொன்னதும் உயிர் பெற்றேன் இன்று ஏனடா உன்னை காதலித்தேன் என்று உயிர் போகும் துயருற்றேன்;
சொடுக்கு போடும் நாழிகையில் என்னை நீ பிரிந்தாய் இனி உன்நினைவுகள் தொடுக்கும் கணைகளை தனியாய் எப்படி எதிர் கொள்வேன்;
அன்பே  உயிர் போகும் வரை மனகுகையில் ஓவியமாய் உன்னை வைத்திருப்பேன், ஆயிரம் மரணம் தாண்டியும் உனக்காக நான் பிறப்பேன்.,

No comments:

Post a Comment